Saturday, June 21, 2014

அபூர்வ பக்தி

ஒரு சிலந்தி இறைவனை தினமும் மனதால் நினைத்து மானசீக பூஜையும் செய்து வந்தது.அதற்கு மக்கள் இறைவனுக்கு எதாவது விதத்தில் பூஜை செய்வது போல் தானும் பூஜிக்க ஆசைப்பட்டு யோசித்தது.பின்னர்  அந்த ஈசனுக்கு தன் வாய் நூலால ஒரு பந்தல் அமைத்து வந்தது. சில சமயம் மக்கள் அதைக் கலைத்து போட்டாலும் அல்லது காற்றினால் அது  கிழிந்தாலும் அது கவலைப்படாமல் திரும்பவும் வேறொரு வலையைப் பொறுமையாக செய்யும் . இதைப்பார்த்த ஈசன் அதன் பக்தியைப் பரிசோதிக்க அக்னி மூலம் அந்த வலையை எரித்துவிட்டார். பந்தல் கருகிப்போனது கண்டு சிலந்திக்கு ரொம்ப கோபம் வந்தது.. கோபத்தில் "நான் ஈசனுக்காகக்கட்டிய  பந்தலை எரித்துவிட்டாயே .உன்னை என்ன செய்கிறேன் பார் "என்றபடி அக்னி மேல் பாய்ந்தது. நெருப்பு தன்னையும் சுட்டுப்பொசுக்கி விடும் என்று அறியாமல் ஈசனின் பந்தலை அழித்த கோபம் மட்டும் மனதில் மிஞ்ச  நெருப்பின் மேல் பாய அதில் கருகி உயிரை விட்டது. பரமேஸ்வரன் அதை அப்படியே தழுவிக்கொண்டார். மோட்சம் அளித்து தன் பாதத்தில் வைத்துக்கொண்டார். இந்தச்சிலந்தி ஈசன் அதாவது லிங்கத்தின் பாதத்தில் இன்றும் ஸ்ரீ காளஹஸ்தியில் பார்க்கலாம். ஸ்ரீ என்ற பெயருடன் இந்தச்சிலந்தி இருக்கிறது. 

அடுத்ததாக காளஹஸ்தியின் பெயர் வந்த காரணத்தைப் பார்க்கலாம் .
 
காளம் என்றால் பாம்பு , ஹஸ்தம் என்றால் யானை . ஆக இந்தப்புராணக்கதையில் சர்ப்பமும் .யானையும் சம்பந்தப்பட்டிருக்கிறது .இரண்டும் ஒரே இடத்தில் சிவனைப்பூஜித்து வந்தன.ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. முதலில் பாம்பு வந்து இரத்தினங்களால் சிவனை பூஜித்துவிட்டு செல்லும். பின் சிறிது நேரம் கழித்து யானை தன் தும்பிக்கையில் நீரை நிரப்பியபடி வரும். சர்ப்பம் பூஜைசெய்த இடத்தில் நீரை தெளிக்கும் .பின்   இலைகளைப்போட்டு பின் மலர்களைத்தூவி பூஜை செய்யும் . பின் சிவனை மனதில் நினைத்தபடியே அங்கிருந்து அகலும். மறுநாள் நாகம் வந்து பார்க்க அந்த இடம் முழுவதும் இலைகளும் .வாடிய பூக்களும் இருக்க அவைகளை அப்புறப்படுத்தும். இப்படியே பல நாட்கள் கழிந்தன. ஒருவர் பூஜை செய்ததை மறுவர் கலைத்துவிட்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தபடியே இருந்தன.
ஒரு நாள் பாம்பு கோபத்துடன் இதற்கு முடிவு கட்ட  ஒளிந்துக்கொண்டு யார் இந்தக்காரியம் செய்கிறார்கள் என்பதைப் பார்த்தபடி லிங்கத்தின் பின் அமர்ந்தது. யானையும்  வந்தது. பாம்பும் கோபத்துடன் அதன் தும்பிக்கைக்குள் புகுந்து தாக்கியது . தாங்கமுடியாத வலியால் மிகுந்த வேதனையுற்று அங்கிருந்த பாறையின் மேல்  யானை தன் தலையை மோதிக்கொண்டது .பாம்பும் உள்ளேயே நசுங்கி மடிந்து கீழே விழுந்தது. யானையும்  தன் தலையை  மோதிக்கொண்டதால் காயம் ஏற்பட்டு மடிந்தது. இருவர் முன் சிவன் தோன்றி இருவரையும் அணைத்துக்கொண்டார்.சிலந்திக்கு கொடுத்தாற்போல் இருவருக்கும் மோட்சம் கொடுத்தார். பின் தனது உடலிலேயே அங்கங்களாக்கிக்கொண்டார் .  இதனால் அவரது பெயரும்
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஆயிற்று. ராகு ,கேது தோஷம் இருப்பவர்களுக்கு இது ஒரு பரிகார ஸ்தலமாக இருக்கிறது . 

அன்பே தெய்வம்

அன்பே கடவுள்  என்கிறோம் .  இதிலிருந்து அன்பு,வாழ்க்கையில் எவ்வளவு முக்கிய  பங்கு வகிக்கிறது என  தெரிகிறது. ஒருவருடைய கோபத்தால் அவரது  குடும்பம் முழுவதும் நிம்மதி இழந்து   தவிப்பதைப்பார்த்திருக்கிறோம் .அதேபோல் ஒருவருடைய அன்பினால் எப்படிப்பட்ட குடும்பத்தையும் கட்டிப்போட முடியும்  அரவணைத்துக்கொண்டு போக முடியும். 

"அன்புஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும் 
நண்பு என்னும் நாடாச்சிறப்பு " என்கிறார் திருவள்ளுவர் .
அது உலகத்தாரையே நட்பாக்கும். சிறப்பாக்கும் என்கிறார் . 

"அன்பு என்பதே தெய்வமானது
 அன்பு என்பதே இன்பமானது 
மதத்தின்  மேல் வைத்த அன்பு பக்தியானது 
மனிதன் மீது வைத்த அன்பு  பாசமானது  
இதய மீது வைத்த அன்பு உண்மையானது
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது 
   
என்ற மிக அழகான பாடலை நமது கவியரசர் திரு கண்ணதாசன் அவர்கள்   கொடுத்திருக்கிறார்..அன்பு  இருக்கும் இடத்தில் முகம் மலர்ந்திருக்கும் .முகத்தில் ஒரு புன்னகை இருக்கும் .அங்கு மன்னிப்பு இருக்கும். பணிவு இருக்கும் மரியாதை இருக்கும் ..அன்புக்கு மிருகங்களும் கட்டுப்படும்.அன்பு எனும் சொல் ஒன்றுதான் ஆனாலும் அதை வெளிபடுத்தும் விதத்தில் வித்தியாசம் ஏற்படும் .தாய் தந்தையிடம் காட்டும் அன்பு, காதலியிடம் காட்டும் அன்பு ,.குழந்தைகளிடம் காட்டும் அன்பு ,  நண்பர்களிடம் காட்டும் அன்பு ,  இறைவனிடம் கட்டும் அன்பு .என்று பலவகை இருந்தாலும் இறைவனிடம் காட்டும் அன்பே நிரந்தரமானது, இதைப்புரிந்துக்கொள்ள ஒரு சின்ன கதை 

ஒரு செல்வந்தர் விடாமல் லட்சுமி பூஜை செய்து வந்தார்  ஒரு நாள்   அவர் கனவில் லக்ஷ்மி   தோன்றினாள்.  " சேட்ஜி  நான் இன்னும் சில தினங்களுக்குள்  உன்னை விட்டுப்போய்விடுவேன்  நீ செய்த புண்ணியச்செயல்களால் தான் உன்னுடன் இருந்தேன்.
உன் புண்ணியங்கள் முடிந்து விட்டன ஆகவே நான் வீட்டை விட்டுப்போகப்போகிறேன் அதற்குள்  ஏதாவது வரம் கேட்க விரும்பினால்  கேட்டு வாங்கிக்கொள் " என்றாள்.

"அம்மா திருமகளே நான் என் குடும்பத்தில் இதைப்பற்றிக் கேட்டப்பின்  வரம் கேட்கிறேன்  நீ என்னை  விட்டுப்போவது எனக்கு மிக வருத்தமாக இருக்கிறது " என்று மனமொடிந்துக் கூறினார்
மறு நாள் கனவைப்பற்றி தன் குடும்பத்தாருக்குத் தெரிவித்தார் மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று எல்லோரிடமும் கேட்டார் .

"வைரம் முத்து மரகதம் மாணிக்கம் என்று கேளுங்கள்"  என்று முந்திக்கொண்டாள் மனைவி 

பொற்குவியல்களைக் கேளுங்கள் அப்பா " என்றான் மூத்த  மகன் 

"உணவு பண்டங்கள் கேட்கலாமே" என்றான் இரண்டாவது மகன் 

வேறு சிலர் வீடு வாகனங்கள் என பல கேட்கச்சொன்னார்கள் ..பின் வந்தாள்.அவரது கடைசி மருமகள் .  " அப்பா   எல்லோரும் பலவிதமானப் பொருட்களைக் கேட்டனர் அவைகள் எல்லாம வநதாலும் கூட எப்போ லட்சுமி போகப்பாவதாகச்சொன்னாளோ அப்போதே
இனதப்பொருட்களும்  அழிந்து விடும்  . இவைகள் ஒன்றும் நிலைத்திருக்காது .   ஆகையால் தாங்கள் நம் குடும்பத்தில் பரஸ்பர அன்பு நிலைத்திருக்கட்டும்   என்ற வரம் கேளுங்கள் எத்தனைக்கஷ்டங்கள் வந்தாலும் பரஸ்பரம் அன்பு இருந்தால் அங்கு நிம்மதி நிலைக்கும்.
வாழ்க்கை நிம்மதியாகக் கழிக்க முடியும் " என்றாள்


எல்லோருக்கும் இது சரியென்றே பட்டது 

மறுநாள் கனவில் திருமகள் தோன்றினாள் "  என்ன சேட்ஜி என்ன கேட்க நினைத்தாய்?

"̀தேவி தாங்கள் என்னைவிட்டுப்போவதில் வருத்தமே ஆனாலும் நீங்கள் சொன்னபடி எனக்கு ஒரு வரம் தர வேண்டும்.   என் குடும்பத்தினரிடையே பரஸ்பர  அன்பும் பாசமும் ஒற்றுமையும் நிலைக்க வேண்டும்இந்த வரத்தை அளிக்க  வேண்டும் 

புன்னகைப்பூத்தாள் திருமகள் . " மகனே  இநத வரம் கேட்டு என்னை இங்கயே கட்டுப்போட்டு விட்டாய். எங்கு சண்டையில்லையோ  அன்பு இருக்கிறதோ அங்கு நான்  நிரந்தரமாக இருக்க விரும்புவேன்.குடும்பத்தில் அன்பு நிலவ வேண்டும்
என்று நீ கேட்டு விட்டாய்.     உன் குடும்பத்தை விட்டு எப்படி  நான் செல்ல முடியும் ?  என்று சொன்னபடியே அங்கேயே நிலைத்து விட்டாள்  










Saturday, November 2, 2013

மண்ணெண்ணையில் லட்டுவா?

ஒரு சமயம் சித்தேஸ்வரி பீடத்தில் நவராத்திரி விழா எப்போதும் போல் விமரிசையாக நடக்க இருந்தது .எல்லா அனபர்களுக்கும் தொண்டர்களுக்கும் வினியோகிக்க என்ன செய்யலாம் என்று பலர் யோசிக்க கடைசியில் லட்டு என்று தீர்மானிக்கப்பட்டது.அதற்கு முன் கூட்டியே தேவையான நெய்க்கு சில வியாபாரிகளிடம் தொண்டர்கள் சொல்லி வைத்திருந்தனர்.                   "என்னப்பா நெய் வந்துவிட்டதா ?நேரம் போகிறதே.  இன்னும்  லட்டு வேறு பிடிக்க வேண்டுமே"                                                                                             "ஆமாம் எனக்கும் அந்தக்கவலைதான் என்ன ஆச்சோ ? ஒரு வியாபாரிக்குமா ஞாபகமில்லாமல் போய்விடும் "
"என்ன செய்வது!  பக்தர்கள் கூட்டம் வர ஆரம்பித்து விட்டதே "  இப்படி லட்டு பிடிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் கவலையால் முகம் களையிழ்ந்து நிற்கு அங்கு திடீரென்று பிரவேசம் செய்தார் ஒரு சித்தர் .எல்லோரும் ஆச்சரியமாக அவரைப்பார்த்து வாயடைத்து நிற்க அவர்  "என்ன இன்னும் நெய் வரலையா? அதான் கவலையா?' என்றார்  அவரே மௌனானந்த சுவாமிகள் என்ற சித்த புருஷர் . வந்தவர் அமைதியாக ஒரு கரி அடுப்பை மூட்டி ஒரு பெரிய இரும்புசட்டியைக்கொண்டுவரச்சொன்னார். 
" மகனே ஆச்ரமத்தில்  மண்ணெண்ணை இருக்கா ?"                                                                           "இருக்கு சுவாமி "                                                                                                                                  "சரி இரண்டு டின் கொண்டுவா"                                                                                                                இரண்டு டின் மண்ணெண்ணை வந்ததும் லட்டு செய்யும் வேலை ஆரம்பமாகியது இரும்பு சட்டியில் மண்ணெண்ணை ஊற்றி  ஏதோ ஒரு பச்சிலை மூலிகையின் சாரை பிழிந்து காய்ச்சினார் .அது கமகமக்கும் நெய்யானது .அதன் வாசனை ஊரைத்தூக்கியது அதை வைத்து ஐயாயிரம் லட்டுக்கள் தயாரானது சீரடி பாபா ஜி தன் வாயிலிருந்து உமிழ்ந்த நீரால் விளக்கை ஏற்றியது போல் இந்த சித்தர்  மண்ணெண்ணையிலிருந்து நெய் உண்டு செய்திருக்கிறார் .இவர் மூலிகைக்கொண்டு பல அத்புதங்களைச்செய்தவர்மூலிகைகளின் மஹத்துவத்தை அறிந்து பலருக்கு வைத்தியம் செய்தவர் .தேள் கடி  பாம்பு கடி போன்றவைகளை மூலிகைச்சாரால் குணப்படுத்திவிடுவார் .மாதர்கள் குழந்தை பேறுவின் போது இவரிடமிருந்து ஒரு வேர் வாங்கிச்சென்று   தங்கள்   தலைகாணி அடியில் வைத்துக்கொள்ள சுகப்பிரசவம் ஏற்படும் சில மூலிகைக்கொண்டு சில உலோகங்களைத் தங்கமாக ஆக்கும் திறனும் இவரிடம் இருந்தது .இந்த மௌனானந்தர் சுவாமிகள் 1943ல் சித்தி அடைந்தார். இவரது சமாதி சித்தேஸ்வரி பீடத்தில்  இருக்கிறது . 

வைகுந்தத்தில் ஒரு பானை

சிறு வயதில் கண்ணன் செய்த குறும்புக்கு அளவே இல்லை ;அந்தக்குறும்பிலும் பலர் நன்மை அடைந்திருக்கின்றனர் அதில் ஒரு பானையும் உண்டு. மண்பானை எப்படி வைகுந்தத்திற்கு போயிற்று?  அந்தக்கதையைப்பார்க்கலாம்      ததிபாண்டன் என்பவன் கண்ணனுக்கு உற்ற நண்பன்.ஆனால் ரொம்ப சாது.சூது கபடம் இல்லாதவன் .கண்ணன் செய்யும் குறும்புகளில் கண்ணன் தப்பிக்க இவன் மாட்டிக்கொண்டு தண்டனை அனுபவிப்பான்.ஒரு நாள் ததிபாண்டனின் தாய் அவனுக்கு கன்றுகுட்டிகளைக்கட்டி பாதுகாக்கும் வேலையைக்கொடுத்தாள் அவைகளை அவிழ்த்து விட்டால் தாயிடம் சென்று பாலைக்குடித்துவிடும் ஆகையால் அவைகளைக்கட்டி வைக்கச்சொன்னாள். ததிபாண்டனும் தாய் சொன்னதைத்தட்டாமல் காத்து நின்றான் .அங்கு மயில் பீலி ஆட கிருஷ்ணன் வந்தான் ,                                                            
   "என்ன ததிபாண்டா?என்ன கன்றின் அருகில் நிற்கிறாய்?    "அதுவா  கன்றுகள் தாயிடம்  சென்று பால் குடிக்காமல் பார்த்துக்கொள்ளும்படி என் தாய் கட்டளை இட்டிருக்கிறார்.அதனால் தான் இங்கு நிற்கிறேன் ."                                                                   "அப்போ உனக்காக கொண்டு வந்த இனிப்பு வேண்டாமா?  இதைக்கேட்டவுடன் நாக்கு ஊற  "எங்கே வைத்திருக்கிறாய் .காட்டு பார்க்கலாம் "
"அவைகளை வைக்கோல் போர் பின் வைத்திருக்கிறேன் .அங்குப்போய் பார் "
ததிபாண்டன் இப்போது கன்றுகளை மறந்தான் ,கண்கள் முன் இனிப்பே தெரிந்தது வைக்கோல் போர் அருகில் சென்றான்.அதற்குள் கண்ணன் கன்றுகுட்டிகளை அவிழ்த்து விட்டான்.கன்றுகளும் துள்ளிக்குதித்தோடி தாய்பசுவிடம் பாலைப்பருகின.இந்த நேரத்தில் ததிபாண்டவனின் தாய் அங்கு வந்து பார்த்து  கோபம் கொண்டாள். "எங்கேடா போனாய்?நான் கன்றுக்குட்டிகளைப் பாத்துக்கொள்ளச்சொன்னால் நீ எங்கேயோ போய்விட்டாய் " என்று கூறியபடியே வர கண்ணன் அங்கு வந்தான் . "நீங்கள் உங்க மகனைத் தேடுகிறீர்களா?அவன் வைக்கோல்போர் பின்னால் இனிப்பை ருசி  பார்த்துக்கொண்டிருக்கிறான் ."                    "ஏண்டா ததிபாண்டா உனக்கு இவ்வளவு திமிரா?' என்று கூறியபடியே  அவனை ஒரு குச்சியால் விளாசினாள் அவனும் அழுதபடி கண்ணனிடம் வந்தான் 'கண்ணா என்னை மாட்டிவிட்டாயல்லவா?எனக்கும் ஒரு காலம் வரும் அப்போது பார் " என்று கூறியபடியே அங்கிருந்து நகர்ந்தான் . 
அந்த நாளும் வந்தது. திருட்டுத்தனமாக இதோ கண்ணன் எதோ ஒரு வீட்டில் நுழைகிறான்.இதை ததிபாண்டன் பார்த்துவிடுகிறான்                                                       
 "என்ன கண்ணா எங்க ஓடி ஒளிகிறாய் நீ ?"
"நான் ஒரு கோபியர் வீட்டில் நுழைந்து வெண்ணெய் சட்டியை உடைத்துவிட்டேன் .இதை யாரோபோய் என் அம்மாவிடம் சொல்ல என் அம்மா என்னைத்தேடி வருகிறாள்."
"நான் உன்னைக்காட்டிக்கொடுக்கப்போறேன் நீ அன்று என்னைக்காட்டிக்கொடுத்து அடி வாங்க வைத்தாய் அல்லவா?'                                                                                                                               "வேண்டாம் வேண்டாம் நீ என் நண்பனல்லவா? நீ என்னை இப்போது காப்பாற்ற நான் உனக்கு யாவரும் கிட்டாத ஒன்றை உனக்கு அளிப்பேன்'   ததி பாண்டவனும் மனசு மாறி அவனிடம்  "இங்கேபெரிய பானை இருக்கு அதற்குள் ஒளிந்துக்கொள்"                                                                 "கண்ணனும் ஒரு பானைக்குள் ஒளிந்துக்கொண்டான் ததிபாண்டன் அதன் மூடியின் மேல் அமர்ந்துகொண்டான்.
கோபியும்  யசோதயும் அங்கு வந்து 'இங்கு கண்ணன் வந்தானா ?நீ பார்த்தாயா?"என்று வினவ அதற்கு அவன் "எனக்குத்தெரியாதே நான் ஒருவரையும் இங்கு பார்க்கவில்லை "என்று பதிலளித்தான் .அவர்களும் போய்விட்டார்கள் .கண்ணன் பானையிலிருந்து குரல் கொடுத்தான் .நண்பா நான் வெளியே வரவேண்டும் ..பானையிலிருந்து கீழே இறங்கு"                                          ததிபாண்டவன் கீழே இறங்காமல் குரல் கொடுத்தான் "கண்ணா பானையிலிருந்து வெளியே வரவேண்டுமென்றால் எனக்கு நீ மோட்சம் கொடு'
"ததி பாண்டன்  எனக்கு உள்ளே மூச்சு முட்டுகிறது சரி தருகிறேன் . நீ கீழே இறங்கு"     அப்போதும் அவன் கீழே இறங்கவில்லை  "இன்னும் ஏன் தாமதம் செய்கிறாய்? நான் தான் மோட்சம் கொடுப்பேன் என்றேனே "
"நீ எனக்கு மட்டும் கொடுத்தால் போதாது .உன்னைக்காப்பாற்றிய இந்த மண்பானைக்கும் மோட்சம் அளிக்க வேண்டும் " . "சரி   அப்படியே செய்கிறேன் ரொம்ப மூச்சு முட்டுகிறது நண்பா"   ததி பாண்டன் பானை மூடியிலிருந்து கீழே குதிக்கிறான். வாசலில் புஷ்பவிமானம் ஒன்று வந்து நிற்கிறது "நண்பா நீ கேட்டபடியே இதில் ஏறி பானையுடன் வைகுந்தம்  போ."
 "மிக்க நன்றி கண்ணா. நீ சொன்னபடி செய்துவிட்டாய் " என்றபடி மண்பானையுடன் வைகுந்தம் சென்றுவிட்டான் .வைகுந்தத்தில் இந்தப்பானை இருப்பதாக ஐதீகம்                                                                              

கோமந்தக் நாராயணி

ஒரு தேவி தான் அருள் புரியும் கோயிலில்  காலையில் சிறு பெண்ணாக அலங்கரித்தபடி காட்சி தருகிறாள். பாலா திருபுரசுந்தரியைப்போல்.. பால்வடியும் முகம் போல் முகம் இருக்க முகத்தில் புன்னகை .உச்சி பூஜையின் போது அந்தச்சிறுமி இளம் பெண்ணாக காட்சி அளித்து அருள் புரிகிறாள்.மாலை நேரம்  வீட்டுப்பெண்மணிப்போல் தரிசனம் தருகிறாள்.இவள் பூணலும் தரித்திருக்கிறாள்.  நான்கு திருக்கரங்கள்.திருசூலினி என்ற பெயருக்கு ஏற்ப வலது கையில் சூலம் ஏந்தியிருக்கிறாள். கீழ்க் கையில் கத்தியுடன் முண்டாசுரனின் தலையும் இருக்கிறது  அதன் கீழே முண்டாசுரனின் இரத்தத்தைக்குடிக்கும்  ஒரு . ஓநாய்.   இடது கையில் அமிருதகலசம் ஏந்தியபடி இருக்கிறாள்.இவளைப்பற்றி விசாரித்தேன் .  இவள் தான்      "மஹாலாச நாராயணி" என்று தெரிய வந்தது ,பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட அமிருத கலசம் வெளி வர தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அமிருதம் பெற்றுக்கொள்ள சண்டை வந்துவிட்டது . இதைச்சரி செய்ய மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார் .இந்த மோகினியைத்தான் 'மகாலாச நாராயணி' என்ற பெயரில் மஹாராஷ்டிராவில் பூஜிக்கிறார்கள். சிலருக்கு இவள் குலதெய்வமாக விளங்குகிறாள். கொங்கன் சாரஸ்வத் பிராம்மின் .தேசாயி கத்ரி  போன்றவர்கள் இவளைப் பூஜிக்கின்றனர்.. மகாலாச நாராயணி என்பவள் இரு உருவம் கொண்ட ஒரு தேவி ,அவள் மோகினியாகவும் ,பார்வதியாகவும் இருக்கிறாள் என்கின்றனர் சிலர்.தவிர அவள் "கண்டோபா " என்பவரின் மனைவி என்றும் சிலர் நம்புகின்றனர்.கண்டோபா   சிவனின் மறு அவதாரம் என்றும் படைத்தலைவன் என்றும்  அவர்கள் சொல்கின்றனர் .நாம் துதிக்கும் வீரபத்திரராக இருக்குமோ என்று எனக்குத்தோன்றியது அஹமத்நகரில் நிரஸா என்ற இடத்தில் மோகினிராஜ் என்ற கோயிலில் இவள் அருள் புரிகிறாள்.இந்தகோயில் முதலில் சிறிதாக இருந்தது ஆனால் பின் வந்த  ஒருபக்தர்,ஶ்ரீ  கங்காதர் யஷ்வந்த சந்திரசூட் என்பவர்  75 அடி உயரத்திற்கு கோயிலை எழுப்பி பலவிதமான வேலைப்பாடுகளையும் செய்வித்து மிக அழகாக ஆக்கினார் . இந்தகோயில் சிலை முதலில் நேபாலில் இருந்ததாம் .பின் அந்தச்சிலை ஔரங்காபாத்திற்கு வந்து சேர்ந்ததாம்  பின்னர் முஸ்லிம் ஆட்சியில் இந்தச்சிலைக்கு ஏதாவது பங்கம் வந்துவிடுமோ என்று  அது கோவாவிற்கு எடுத்துச்செல்லப்பட்டதாம் .கோவாவில்  கோமந்தக் என்ற இடத்தில் இந்த நாராயணி வந்தமர்ந்தாள்.
போர்ச்சுகீசியர்கள் படையெடுப்பு ஆரம்பிக்க  இந்த  அம்பாளை பத்திரமாக வடகர்நாடகாவிற்கு எடுத்து வந்தனர் . பின் அவளை ஒரு குடத்தில் வைத்து "கும்தா "என்ற இடத்தில் பிரதிஷ்டை செய்தனர் .
மராட்டி மும்பாதேவி போல் மரவேலைப்பாடு செய்த கதவுகள் கொண்ட கோயில்.கதவுகள் வெள்ளி தகட்டால மூடப்பட்டுள்ளன.
கும்தாவின் மகாலாச நாராயணிக்கு நவராத்திரி உத்சவம் பிரமாதமாக நடைப்பெறுகிறது ..கோவாவிலும் மிகச்சிறப்பாக நடைப்பெறுகிறது  தேர்த்திருவிழாவின் போது தேர் வாழை மரத்தண்டினால் அலங்கரிக்கப்படுகிறது  தவிர மக்களுக்குப்பிரச்சனை இருந்தால் இங்கிருக்கும் மரத்தின் இலைகளை  இந்தச்சிலையில் முப்பத்திரண்டு இடத்தில் பக்தர்  ஒட்ட வைப்பார் . பின் அவரவர் பிரச்சனைக்கு  இலை அசைய  அதைக்கொண்டு விடை பெற்றுக்கொள்வது வழக்கமாம் .

கண்ணன் திரும்பி நின்றான்

குலம் எதுவானால் என்ன .மனம் நிர்மலமாக இருந்தால் அந்த ஈஸ்வரனே நம் முன் வந்துவிடுவார். சுவாமி தன் பக்தனுக்காக என்னவேண்டுமானாலும் செய்வார். வியாசராயருடைய சீடர் "கனகதாசர்"   நீச குலத்தில் தோன்றியவர்.ஆனால் எப்போதும் சத்யத்தை விடாது கடைப்பிடிப்பவர்.சிறந்தஞானஸ்தர். தன்னிடமிருக்கும் எல்லா செல்வத்தையும்  ஏழைகளுக்கு   தானம் செய்துவிட்டு  நாம ஜெபம் செய்து கொண்டிருப்பார். பகவத்பஜனையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பவர் .ஆனால்  இந்த ஜாதி வெறி இவரைக்கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை.பாவம் ! கோயில் வாசலிலேயே மணிக்கணக்காய் நிற்பார்.காலில் சலங்கைக்கட்டியபடி பஜன் பாடியபடியே நர்த்தனம் ஆடுவார்,கையிலோ வீணை இருக்கும்.  அவர் கண்முன் எப்போதும் கிருஷ்ணனே தெரிவார்.அதுவும் மாத்வாசாரியார் பூஜித்த கிருஷ்ணன் ..  ஒரு முறை கிருஷ்ணரின் பாடலைப்பாடியபடி  'கோவிந்தா கோபாலா 'என்று குதித்து குதித்து ஆடிகொண்டிருந்தார்.அந்த வழியாக சில பிராம்மணர்கள் வந்தனர் .கனகதாசர் தன் கண்களை மூடியபடி கண்ணனை அனுபவித்தபடி ஆடிக்கொண்டிருந்ததால் இவர்கள் வந்ததை கவனிக்க முடியவில்லை . தாங்கள் உயர்ந்த ஜாதி என்ற கர்வத்துடன் கனகதாசரைப்பார்த்து  "என்ன முட்டாளே ! கிருஷ்ணன் பாட்டு பாடிண்டு இப்படி தொம் தொம்முன்னு குதிக்கறயே. நீயா கண்ணனை பார்க்க போறே !கீழ்சாதில பிறந்துட்டு கண்ணனெ ஏமாத்தப்பாக்கறயா  நாங்க வரது கூட தெரியாம வழியை மறைச்சு கூத்தடிக்கறே.போ போ  தூரத்தல ஒரு ஓரமா நின்னு என்ன வேணுமோ செய் .முதல்ல எங்களுக்கு வழி விடு ."

கனகதாஸர் தன்னை நிந்தித்த பிராம்மணர்களையும் வணங்கிவிட்டு கோயிலின் பின்புறமாகச்சென்று ஹரிகீத்தனம் செய்ய ஆரம்பித்தார் ,பிராம்மணர்களும் "சஹஸ்ர சீருஷா புருஷா'என்றபடி புருஷசூக்தம் ஓதியபடி கோயிலுக்குள் சென்றனர்.கண்ணன் பார்த்தான் தன் பக்த்தனுக்கு அபராதம் செய்த அவர்களை அவனுக்குப் பார்க்க விருப்பம் இல்லை.அதனால் கிருஷணன் கனகதாசர் இருக்கும் பக்கம் திரும்பிக்கொண்டான் .  கனகதாசரின் பாடல் காதி விழ தன் மத்தினால்சுவற்றில் ஒரு ஓட்டையிட்டான் . தன் பக்தனைக் கண்டான்.பக்தனோ தன்னையும் மறந்து வீணையுடன் பாடுவது தெரிந்தது .தானும் ஜல் ஜல்லென்று நடனம் ஆடத்தொடங்கினான். கனகதாசரும் என்னடா இது  திடீரென்று சுவற்றில் ஓட்டை  தெரிகிறதே என்று ஓட்டை வழியாக பார்க்க  ஆஹா அருமையான காட்சி . நீலமேகஸ்யாமளன் ,பங்கஜாட்சன் .தலையில் மயில்பீலி         கழுத்தில் கௌஸ்துப மணி மாலை .அணிந்து அதி சுந்தரனாக காட்சியளித்தான்.உதட்டில் புன்னைக.கண்களில் குறும்பு. சகலாபரணபூஷிதனாக அவரைக்கவர்ந்தான்.காலில் தங்க கொலுசு .கையில் மத்தைப்பிடித்தபடி நடனமாடும் கண்ணன் .அங்கு அவருக்கு தரிசனம் தந்தான் . கனகதாசர் இந்த பூலோகத்திலேயே இல்லை.கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருக  கண்ணனையே கன் கொட்டாமல் பார்த்தபடி நடனம் ஆடினார் .

கோயிலில் பிராம்மணர்கள்  கண்ணன் திரும்பி நிற்பதைப்பார்த்து திகைத்துப்போனார்கள் விஷயத்தைப்புரிந்துக்கொண்டார்கள்  கனகதாசரிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டு அவரது பெருமையையும்  தெரிந்துக்கொண்டார்கள். இப்பவும் கண்ணனைக்காண செல்பவர்கள் அந்த ஓட்டை வழியாகத்தான் கண்ணனை  தரிசிக்க முடியும்  .

கொலு 2015

கொலு 2015
அந்தக்கால கொலுவுக்கும் இந்தக்கால கொலுவுக்கும் நிறைய வித்தியாசங்களை நான் பார்க்கிறேன் அந்தக்காலத்தில் கொலு படிகள் மூளையை உபயோகித்து அமைக்கப்பட்டன. இந்தக்காலத்தில் கொலு வைக்க ரெடிமேடாக எல்லா அளவுகளிலும் படிகள் வாங்கமுடியும் .இதை கொலு ஆனப்பின் புத்தக அலமாரிப்போல் உபயோகித்தும் கொள்ளலாம் அந்தக்கால கொலுவில் அதிக சிரத்தை ,பக்தி இருந்தது.இந்தக்காலத்தில் பக்தியை விட புகழுக்கு ஆசை, தற்பெருமை போன்றவை முக்கியத்துவம் பெருகிறது இதற்கு விதிவிலக்கு இருக்கலாம் .அந்தக்காலத்தில் கல்லுரல் ,அம்மி குழவி தவிர பிரசாதம் செய்ய வேறு உதவியில்லை.இக்காலத்திலேயோ பலவிதமான் மிக்ஸி ,அல்லது ரெடிமேட் மாவு ,விற்கப்பட்டு வேலைபளுவை மிகவும் குறைக்கிறது, அந்தக்காலத்தில் கொலு மூலம் பல உறவினர்கள் கூடும் வாய்ப்பும் தினமும் மஞ்சள் குங்குமம் கொடுக்கும் பாக்கியமும் வீட்டுத்தலைவிக்கு கிடைத்தது.உறவினர்களின் இணைப்பால் குடும்பம் மேலும் வலிமை பெற்றது ,இதனால் வளரும் சிறுமிகளுக்கும் நம் கலாச்சாரம் தெரிய வந்து அதில் அவர்கள் ஈடுபட்டு கலாசாரமும் வளர்ந்தது. இப்போதோ பத்து நாட்களில் தமக்கு சௌகரியமான நாளை தேர்ந்தெடுத்து அன்று மட்டும் மஞ்சள் குங்குமம் கொடுக்க அநதப்பெண்மணியின் பங்கு முடிந்து விடுகிறது .இதனால் வருங்கால சந்ததிக்கு மாமா பெண் ,அத்தை பெண் குடும்பம் கூட தூரமாகி போய் விட்டது .அந்தக்காலத்தில் ஆபீஸ் போகும் பிரச்சனை மிகக்குறைவு .ஆனால் இந்தக்காலத்தில் ஒவ்வொரு நபரும் வெளியில் உத்தியோகம் பார்க்கின்றனர் .இதனால் இது போல் பத்து நாட்கள் பண்டிகை ஒரு பாரமாக அமைந்து ஏனோதானோவென்று அநத் திருநாள் முடிக்கப்படுகின்றது. உடலிலும் உள்ளத்திலும் ஒரு சலிப்பு தட்டுகிறது .தவிர அந்தக்காலத்தில் பணம் குறைவாக இருந்தாலும் மனநிறைவு அதிகமாக இருந்தது . இந்தக்காலத்தில் எத்தனை சம்பாதித்தாலும் போதவில்லை. ஏனென்றால் நிறைந்த மனம் இல்லாமல் பேராசை அதிக பங்கு வகிக்கிறது .இதனாலே பூக்காரி கூட இது போன்ற நாட்களில் மல்லிகை முழம் முப்பது ரூபாய் என்று விற்கின்றனர் அந்தக்காலத்தில் பண்டிகைகேற்ப உடையைக்காண ஒரு தெய்வீக உணர்வு ஏற்பட்டது .இந்தக்காலத்தில் சிலரைப்பார்க்க ஒரு பேஷன் பரேட் பார்க்கும் பிரமை ஏற்படுகிறது .சிலர் தன் தோற்றத்திற்கு பொருந்துகிறதா என்று கூட பார்க்காமல் தங்களை அலங்கரித்துக்கொள்கிறார்கள்.சரி இப்போது 2015ல் கொலுவைப்பற்றிய ஒரு கற்பனை
காட்சி ஒன்று
மூன்று தலைமுறை கொண்ட ஒரு குடும்பம்.பாட்டி ராஜம்மா ,மருமகள் ராஜி , பேத்தி லலிதா .கொலு சமீபிக்கும் நேரம் ,பாட்டிரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கிறார். பின் தன் பேத்தியை அழைக்கிறார்.
“ஏண்டி லல்லி கொலு வரதே. இந்த வருஷம் என்ன புதுசா வைக்கப்போறே? தலைவிரிக்கோலமாய் லல்லி வருகிறாள் ஒரு திராட்சைக்குலை காதில் தொங்கியபடி தோளை இடிக்கிறது .
“பாட்டி நான் இந்தக்கொலுவுக்கு ஒரு பிசினஸ் ஆரம்பிச்சிருக்கேன் .கொலு கான்ட்ரேக்ட் பிசினஸ்.”
“அதென்னடி கொலு கான்ட்ரேக்ட் ?’
“அதுவா .வந்து ….அது சஸ்பென்ஸ் பாட்டி கொலுக்கு முதல் நாள் நான் உனக்கு சொல்றேன்.இப்ப வெளிலே எனக்கு நிறைய வேலை இருக்கு. பை பாட்டி, பை அம்மா “
பாட்டி தன் மருமகளை அழைக்கிறார் . ” ஏண்டி ராஜி என்ன சும்மாவே இருக்கே ! இன்னும் பொம்மை எடுக்கலை .இன்னும் படி கட்டலை . இந்த வருஷம் என்ன பண்றதா உத்தேசம் .லல்லி என்னவோ பிசினஸ் ன்னு சொல்லிட்டு போறா. என்னமோம்மா.இந்தக்கால பொண்களை என்ன சொல்றது?’ “அம்மா நான் என்ன செய்யட்டும்? உங்க பேத்தி ஏதோ கொலு பிசினஸ் செய்யறாளாம் அதோட பேரு முத்தேவி என்டர்பிரைஸ். .என்னை கவலப்படாம இருக்க சொல்றா.”
காட்சி இரண்டு .
கொலுவுக்கு முதல் நாள்.வாசலில் பெல் அடிக்க .கதைவைத் திறந்தாள் பாட்டி . இரண்டு பேர்கள் டை கட்டியபடி ஜோராக நின்று வணக்கம் செலுத்தினர் “பெரியம்மா இதுதானே முப்பதாம் நம்பர் வீடு?”
“ஆமாம் .நீங்கள்ளாம் யாரு ?”
“நாங்க முத்தேவி கம்பெனிலேந்து வந்திருக்கோம்.’
“அதுக்கு இங்க ஏன் வந்திருக்கேள்?
“உங்க வீட்ல கொலு வைக்கணும் ஆர்டர் வந்திருக்கு . பெரியம்மா , எங்க கொலு வைக்கணும் ?எத்தனை படிகள் வைக்கணும்?
பாட்டி வழக்கமாய் வைக்கும் இடத்தைக்காட்ட அவர்களும் அந்த இடத்தை மேற்பார்வையிட்டார்கள் “பெரியம்மா இந்த இடத்தில் ஐந்து படிகள் கட்டினால் கதவு திறக்க இடஞ்சலாக இருக்கும் . அந்தக்கார்னர்லேந்து வச்சாக்க இடமும் இருக்கும் .போக வர வழியும் இருக்கும்.ஒரு ஐந்து நிமிஷத்ல நாங்க வறோம் ” என்றபடி வெளியே சென்று பின் அழகான ஹின்டேலியம் படிகளுடன் வந்தனர் .மளமளவென்று படிகளைப் பொருத்தினர் .மேலே அழகான நம் கொடி போன்று மூன்று கலர் கொண்ட ஒரு துணியை விரித்தனர் . பின் பாட்டியைப்பார்த்தனர் . “பெரியம்மா ,கொலுவில் எந்த மாதிரி பொம்மை வேணும், சொல்லுங்க, சிவன் பார்வதியா. அனந்த சயனமா, தேச தலைவர்களா .,காந்தியா நேருவா……..அப்பறம் விவேகானந்தர் . ராகவேந்திரர் ன்னு நிறைய இருக்கு ” “எல்லாம் கலந்து இருக்கட்டும் .தம்பி “. “சரிங்க” . என்று சொன்னபடி அவர்கள் கொலு வைக்க ஆரம்பித்தார்கள்.அழகாக முதல் படியில் கலசம் பின் ஆண்,பெண் மரப்பாச்சிக்களுடன் ஆரம்பித்து கன கச்சிதமாக வைத்து முடித்தனர்..பின் அழகான ரங்கோலி போடப்பட்டது. அருகில் அண்ணா ஹஸாரே உண்ணா விரதம் இருப்பதும் .மியூசிக் அகாடமியில் பாட்டுக்கச்செரி சீனும் மிக அழகாக ஒரு கால் மணி நேரத்தில் செய்து முடித்துவிட்டனர் . “பெரியம்மா நாங்க கொலு வச்சுக்கொடுத்துட்டோம் தினமும் சுண்டல் ,வடை ,பாயசம் செஞ்சு கொடுக்கறோம்.பத்து நாளுக்கும் சேர்த்து சொன்னால் 20% தள்ளுபடி ” “அப்படியா ? சரி எத்தனை சார்ஜ் வாங்கறே?”
“வெத்தலை .பாக்கு. மஞ்சள் குங்குமம் பையோட ரூ,10000.ஆனா இது உங்க வீட்டு சின்னம்மாவோட கம்பெனி .அதனாலே ரூபாயை அவ கிட்டே கொடுத்துடுங்கோ”
“வேறு என்ன ஸ்பெஷல் செஞ்சு தரே?”
“கொலுக்கு முதல் நாளிலிருந்து. கடைசி நாள் வரை புடவை .சட்டை மாட்சிங்காக எடுத்து பிரஸ் செய்து தறோம் .அதுக்கு தனியாக ரூபாய் வாங்கறோம் .ஒரு நாளைக்கு நூறு ரூபாய் .தவிர வாசல்ல மாக்கோலம் காவியுடன் போட்டுக்கொடுக்கறோம்.
இந்த நேரத்தில் லல்லி நுழைகிறாள் . “என்ன பாட்டி .என்ன அம்மா கொலு வச்சாச்சா? ரொம்ப கவலைப்பட்டாயே பயந்தாயே! “நன்னா இருக்குடி இந்த பிசினஸ் ! எத்தன வீட்டை பிடிச்சிருக்கே?
” இது வரை 200 வீடுகளுக்கு ஆர்டர் கிடைத்திருக்கு .இதுக்குன்னு தனியா இரண்டு பேரை ரெக்ரூட்டும் செஞ்சிருக்கேன் அவாளுக்கு நல்ல ஸேலரியும் தரேன் . நமக்கும் நல்ல லாபம் கிடைக்கும் “
“கிடைக்காம என்ன செய்யும் ? இந்தக்காலத்தில் உடம்பு நலுங்காம கொண்டாடத்தானே உங்கள மாதிரி பெண்ணுக்கு பிடிக்கிறது. சரி வேறு என்ன ஸ்பெஷல் வச்சிருக்கே? “அதுவா பாட்டி .இன்னும் நிறைய பிளான் இருக்கு. முகத்துக்கு ஏத்தாற்போல் தலைக்கொண்டை போட்டு விடுகிறோம் தினமும் செய்ய வேண்டிய சுண்டல் பற்றியும் விளக்குகிறோம்.ஆர்டர் கொடுத்தால் பிரசாதம் செய்தும் தருகிறோம் .என்ன அம்மா உனக்கு பிடிசிருக்கா எங்க பிசினஸ்? “லல்லி . நீ சொல்றதெல்லாம கேக்க நன்னாத்தான் இருக்கு.ஆனா சில மாடர்ன் பேமிலி ரொம்ப பெரிய ஹோதாவா கொலு வைப்பாளே,அவாளுக்கு எதாவது ஸ்பெஷல் உண்டா?” “ஒ உண்டே அவாளுக்கு பீஸா .பாஸ்தா ,நூடுல்ஸ்,சௌமீன், ஸ்பிரிங் ரோல் தவிர ஐஸ் க்ரீமும் கொண்டு தருகிறோம் .பிரண்டோட சேர்ந்து சாப்பிட அவாளுக்கு ரொம்ப பிடிக்கும் தவிர ஃப்யூசன் ம்யூசிக்கில் “லலிதா சஹஸ்ரநாமம் “சப்ளை செய்கிறோம் .கர்பா டேன்ஸ் இப்போ பேஷன் ஆயிடுத்து.அதுக்கு தகுந்த பாட்டும் சிடி ல கிடைக்கும் .”
“ஆஹா கேக்கவே ரொம்ப இன்டெரெஸ்டிங்கா இருக்கே .ம்ம் அப்பறம்” …”
“அப்பறம் நாங்க கொலு காம்படிஷனுக்கும் அப்பிளிகேஷன் பார்ம் தந்து அத பில் அப் செஞ்சு அனுப்பறோம் சரி இன்னும் நாலு வீடு முடிக்கணும் .போய்ட்டு வரோம் பெரியம்மா ” “ஏதாவது சாப்பிட்டு போங்கோ . ஏ ராஜி இவாளுக்கு காபியும் கொஞ்சம் பக்ஷணமும் கொண்டு கொடு ” இதோ வரேம்மா ” என்றபடி ராஜி வர “எள்ளுங்கறத்துக்குள் எண்ணெயா நிப்பா என் மாட்டுப்பெண் ” என்றாள் மாமியார் பெருமையுடன்