Saturday, June 21, 2014

அபூர்வ பக்தி

ஒரு சிலந்தி இறைவனை தினமும் மனதால் நினைத்து மானசீக பூஜையும் செய்து வந்தது.அதற்கு மக்கள் இறைவனுக்கு எதாவது விதத்தில் பூஜை செய்வது போல் தானும் பூஜிக்க ஆசைப்பட்டு யோசித்தது.பின்னர்  அந்த ஈசனுக்கு தன் வாய் நூலால ஒரு பந்தல் அமைத்து வந்தது. சில சமயம் மக்கள் அதைக் கலைத்து போட்டாலும் அல்லது காற்றினால் அது  கிழிந்தாலும் அது கவலைப்படாமல் திரும்பவும் வேறொரு வலையைப் பொறுமையாக செய்யும் . இதைப்பார்த்த ஈசன் அதன் பக்தியைப் பரிசோதிக்க அக்னி மூலம் அந்த வலையை எரித்துவிட்டார். பந்தல் கருகிப்போனது கண்டு சிலந்திக்கு ரொம்ப கோபம் வந்தது.. கோபத்தில் "நான் ஈசனுக்காகக்கட்டிய  பந்தலை எரித்துவிட்டாயே .உன்னை என்ன செய்கிறேன் பார் "என்றபடி அக்னி மேல் பாய்ந்தது. நெருப்பு தன்னையும் சுட்டுப்பொசுக்கி விடும் என்று அறியாமல் ஈசனின் பந்தலை அழித்த கோபம் மட்டும் மனதில் மிஞ்ச  நெருப்பின் மேல் பாய அதில் கருகி உயிரை விட்டது. பரமேஸ்வரன் அதை அப்படியே தழுவிக்கொண்டார். மோட்சம் அளித்து தன் பாதத்தில் வைத்துக்கொண்டார். இந்தச்சிலந்தி ஈசன் அதாவது லிங்கத்தின் பாதத்தில் இன்றும் ஸ்ரீ காளஹஸ்தியில் பார்க்கலாம். ஸ்ரீ என்ற பெயருடன் இந்தச்சிலந்தி இருக்கிறது. 

அடுத்ததாக காளஹஸ்தியின் பெயர் வந்த காரணத்தைப் பார்க்கலாம் .
 
காளம் என்றால் பாம்பு , ஹஸ்தம் என்றால் யானை . ஆக இந்தப்புராணக்கதையில் சர்ப்பமும் .யானையும் சம்பந்தப்பட்டிருக்கிறது .இரண்டும் ஒரே இடத்தில் சிவனைப்பூஜித்து வந்தன.ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. முதலில் பாம்பு வந்து இரத்தினங்களால் சிவனை பூஜித்துவிட்டு செல்லும். பின் சிறிது நேரம் கழித்து யானை தன் தும்பிக்கையில் நீரை நிரப்பியபடி வரும். சர்ப்பம் பூஜைசெய்த இடத்தில் நீரை தெளிக்கும் .பின்   இலைகளைப்போட்டு பின் மலர்களைத்தூவி பூஜை செய்யும் . பின் சிவனை மனதில் நினைத்தபடியே அங்கிருந்து அகலும். மறுநாள் நாகம் வந்து பார்க்க அந்த இடம் முழுவதும் இலைகளும் .வாடிய பூக்களும் இருக்க அவைகளை அப்புறப்படுத்தும். இப்படியே பல நாட்கள் கழிந்தன. ஒருவர் பூஜை செய்ததை மறுவர் கலைத்துவிட்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தபடியே இருந்தன.
ஒரு நாள் பாம்பு கோபத்துடன் இதற்கு முடிவு கட்ட  ஒளிந்துக்கொண்டு யார் இந்தக்காரியம் செய்கிறார்கள் என்பதைப் பார்த்தபடி லிங்கத்தின் பின் அமர்ந்தது. யானையும்  வந்தது. பாம்பும் கோபத்துடன் அதன் தும்பிக்கைக்குள் புகுந்து தாக்கியது . தாங்கமுடியாத வலியால் மிகுந்த வேதனையுற்று அங்கிருந்த பாறையின் மேல்  யானை தன் தலையை மோதிக்கொண்டது .பாம்பும் உள்ளேயே நசுங்கி மடிந்து கீழே விழுந்தது. யானையும்  தன் தலையை  மோதிக்கொண்டதால் காயம் ஏற்பட்டு மடிந்தது. இருவர் முன் சிவன் தோன்றி இருவரையும் அணைத்துக்கொண்டார்.சிலந்திக்கு கொடுத்தாற்போல் இருவருக்கும் மோட்சம் கொடுத்தார். பின் தனது உடலிலேயே அங்கங்களாக்கிக்கொண்டார் .  இதனால் அவரது பெயரும்
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஆயிற்று. ராகு ,கேது தோஷம் இருப்பவர்களுக்கு இது ஒரு பரிகார ஸ்தலமாக இருக்கிறது . 

No comments: