முப்பது வருடங்களுக்குப் பின்
திரும்ப கிராமம் வந்தேன் ,
என் பாட்டி வளர்ந்த இடம் ,
என் அத்தை பிறந்த இடம் ,
கும்பகோணம் அருகில் "கச்சனம் "
குதி போட்டது என் மனம் ,
நுழைய நுழைய இனம் புரியாத மகிழ்ச்சி
பார்க்க பார்க்க ஒரு இன்பக் கிளர்ச்சி ,
அதே கிராமம் அதே சூழல் ,ஒன்றும் மாறவில்லை ,,,,,
மாறாத பஸ் ஸ்டாப்
கல்லும் மண்ணுடன் ,
வெளியே வந்தேன்
கசக்கிய கண்களுடன்.
முறுக்கு விற்ற அந்தச் சிறுவன் ,
ஆத்தா இட்டப் பெயரோ முருகன்
இன்று அவர் தொந்திப் போட்ட முதலாளி ,
ஆனால் இன்றும் வறுமைக்குக் காவலாளி
பெரிய ஆலமரத்தடி மேடை ,
அடிக்கும் சாராய வாடை ,
கத்தியைத் தீட்டுகிறான் ஒருவன்
முகம் காட்டுகிறான் ஒருவன்
சவரம் நடக்கும் காட்சி இங்கே ,
கிராமத்தின் சலூனும் இங்கே !
அதே கிராமம் அதே சூழல் ஒன்றும் மாறவில்லை ,
சரித்திரப்புகழ் பெற்ற கோயில் .
கேட்பாறற்று இருந்த வாயில் ,
பாசிப் படர்ந்த அல்லிக்குளம்
சேற்றிலும் மலரும் அல்லி தளம்
கோயிலுள் நுழைந்தேன் ,,,,,
குருக்களின் கடைக்குட்டிப் பையன்
சுப்பிரமண்ய குருக்கள் ஆனான்,
கற்பூரம் ஒளிர்ந்தது
பத்து ரூபாய் விழுந்தது
அவன் மனம் வியந்தது
அதே கிராமம் அதே சூழல் ,ஒன்றும் மாறவில்லை
அழுக்கு சினிமாக் கொட்டகை முன்
சூப்பர்ஸ்டாரின் விசிறிகள்
வெற்றிலைத் துப்பிய சிவப்பு கறைகள்
மூத்திர வாடை அடிக்கும் சுவறுகள்
கோடியில் கட்சித்தொண்டர்கள்
எதிரில் கொடி பிடிக்கும் எதிரிகள்
தெருக்கோடியில் சில மாமிகள்
அலசும் வீட்டுப் பிரச்சனைகள் ,
நடுத்தெருவில் ஒரு கிரிக்கெட் மாட்ச்,
அதிலும் ஒரு குட்டிச் சண்டை
கம்பத்தில் தொங்கிய தபால் பெட்டி ,
அதனருகே குழந்தைகளின் லூட்டி
பகலிலும் சாலை ஓரம்
போதையில் தூங்கும் கோரம்
அதே கிராமம் அதே சூழல் ஒன்றும் மாறவில்லை
ஆனாலும் அங்கு ஒரு நிம்மதி
கிடைத்தது எனக்கொரு அமைதி ,
சாணம் பூசிய சதுரங்கள்,
அதில் அழகிய கோலங்கள் ,
அனுபவித்தேன் இயற்கையின் சூழல்
கொடுத்தது எனக்கு இன்ப நிழல்
திண்ணையில் அமரும் பெரியவர் ,
சத்சங்கம் நடத்தும் தலைவர் ,
மரங்களில் கொஞ்சும் பறவைகள்,
சல சல வென்று ஓடும் ஆறுகள்
முன்நேரம் ஒலிக்கும் கோயில் மணி
காலை நாலுக்கே தொடங்கும் பணி
இதைத் தவிர வேறு என்ன வேண்டும் ?
இயறகை ரசிக்கும் மனம் வேண்டும்
அதே கிராமம் அதே சூழல் ஒன்றும் மாறவில்லை
அன்புடன் விசாலம்
Saturday, February 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment